வியாழன், 22 டிசம்பர், 2022

திமுகவில் இருந்து விலகவும் இல்லை ... பாஜகவில் இணைய போவதுமில்லை என முன்னாள் அமைச்சர் திரு.தோப்பு வெங்கடாசலம் ஸபா நீயூஸ் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி ..!

2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு, ஜெயலலிதா வாய்ப்பளித்தார். மேலும், அந்த தேர்தல் பிரசாரத்துக்காக பெருந்துறை வந்த ஜெயலலிதா, இங்குதான் அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக ஆனாலும், அப்போதைய அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி கிட்டவில்லை. தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், உடல்நலம் குன்றி சென்னை அப்போலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார். இதன்பின் ஓ.பன்னீர்செல்வமும், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் முதல்வராக பொறுப்பேற்றனர். இவர்களது அமைச்சரவையிலும் தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, 2021 சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 9,500 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற சில வாரங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் இணைந்தார். தி.மு.க.,வில் இணைந்த போதிலும், கட்சியின் கரை வேட்டியை அவர் கட்டவில்லை என்றும்,கட்சிக் கொடியை காரில் கட்டுவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால், இவர் தி.மு.க.வை விட்டு விலகப் போகிறார் என உள்ளூரைச் சேர்ந்த சிலரால் தகவல் பரப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தோப்பு வெங்கடாசலம், தி.மு.க.வில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக இன்று திடீரென பல தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது. இந்த தகவல் தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சியினர் பலரும் தோப்பு வெங்கடாசலத்தின் தொலைபேசியை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதனால் இந்த செய்தியை ஊர்ஜிதப்படுத்த முடியாமல் கட்சியினர் தவித்தனர். இந்த தகவலை உறுதிபடுத்துவதற்காக நாமும் தொடர்ந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டோம். அப்போதும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால், அவருக்கு மெஸேஜ் அனுப்பினோம், இதையடுத்து தற்போது தொடர்பு கொண்ட தோப்பு வெங்கடாசலம், ஸபா நீயூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் ... நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வி்ட்டதாக சில செய்தி சேனல்களில் பிளாஷ் நியூஸ் ஓடியது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. கடந்த 1 வாரமாகவே இதுபோன்ற செய்தியை சிலர் பரப்பி வருகிறார்கள். நான் இப்போதும் தி.மு.க.வில் தான் இருக்கிறேன். தவறான செய்தியை ஒளிபரப்பிய சேனல்களை அழைத்து நானே விளக்கம் கூறி விட்டேன். இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றார். வதந்தி பரவ என்ன காரணம் என்று தோப்பு வெங்கடாசலத்திடம் கேட்டோம். அதற்கு விளக்கம் அளித்த அவர், நான் தி.மு.க. கரைவேட்டி கட்டுவதில்லை, கட்சிக் கொடியை காரில் கட்டுவதில்லை என்ற காரணம் கூறி இவ்வாறு அவதூறான தகவலை பரப்புகின்றனர். நான் இப்போதும் தி.மு.க.வில் தான் இருக்கிறேன். இதுபோன்று ஒரு சிலரால் பரப்பப்படும் வதந்தி குறித்து கட்சியின் மேலிடத்துக்கு விளக்கம் அளிப்பேன். பகலில் கட்சிக்காரரின் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருந்தேன். வேறு காரணம் எதுவும் இல்லை என்றார் தெளிவாக...

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: