Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜனவரி, 2025

ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு நாதக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சர்பணா (வயது 19). இவர் பெருந்துறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அவதி அடைந்து வந்தார். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக ஈரோடு எல்லை நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சபர்ணா குடும்பத்துடன் வந்துள்ளார். நேற்று மீண்டும் சபர்ணாவுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, வெளியே சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதித்து மருத்துவர் வரும் வழியிலேயே சபர்ணா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வரும் ஜன.26ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

2025 ஜனவரி 26ம் தேதி (குடியரசு தின கிராம சபைக் கூட்டம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில், காலிங்கராயன் தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கனகபுரத்தில் பிறந்த காலிங்கராயன், பவானி ஆற்றின் குறுக்கே காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரை சுமார் ஏறத்தாழ 57 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டி கி.பி.1282ம் ஆண்டு தை-5ம் நாள் தான் உருவாக்கிய அணைக்கட்டையும், வாய்க்காலையும் உலகுக்கு அர்பணித்ததால் அந்த நாள் (தை 5) காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது.

பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளை தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைக்க காலிங்கராயன் முற்பட்டார். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பிற்கு வித்திட்டவர் காலிங்கராயன். இவர் நினைவாக ஈரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை பொதுப்பணித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 2018ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயருக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, காலிங்கராயனால் அமைக்கப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு ஆண்டு தோறும் தை 5ம் நாள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (ஜன.18) தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் (நீர்வள ஆதாரத் துறை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், காலிங்கராயனின் வாரிசுதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 17 ஜனவரி, 2025

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பிரபல யூடியூபர் ராகுல் உயிரிழந்தார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் மகன் ராகுல் (வயது 27). கேலி கிண்டல் வீடியோ செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதுமூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்தார். குறிப்பாக, யூடியூப் சேனலில் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி மகள் தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு ராகுல் இருசக்கர வாகனத்தில், ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில், ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: இன்று ஒரேநாளில் 56 பேர் தாக்கல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: இன்று ஒரேநாளில் 56 பேர் தாக்கல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜன.7ம் தேதி அறிவிக்கப்பட்டு 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பு தாக்கல் செய்ய இன்று (ஜன.17) கடைசி நாள் என்பதால் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை 20ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது.

வியாழன், 16 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி ஊராட்சிக் கோட்டை, சத்தியமங்கலம் செண்பகப்புதூர், கொடுமுடி, மொடக்குறிச்சி எழுமாத்தூர் மற்றும் கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.18ம் தேதி) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், மூன்ரோடு, ஊராட்சிகோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், கண்ணாடி பாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டக்காட்டு புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

சத்தியமங்கலம் செண்பகப்புதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்தி நகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோண மூலை, வி.ஐ.பி. நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம் மற்றும் கெஞ்சனூர்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளி பாளையம் மற்றும் நாகமநாய்க்கன் பாளையம்.

மொடக்குறிச்சி எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பா ளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சோமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.

மொடக்குறிச்சி கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு. சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பெட்டிநாய்க் கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், முத்துசாமி காலனி, குறிக்காரன் பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரை பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்.ஐ.சி.நகர், ரைஸ்மில் ரோடு, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ. நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதிநகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன் பாளையம் மற்றும் காகத்தான்வலசு.
கோபி அருகே 2 குழந்தைகளை கொன்று தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கோபி அருகே 2 குழந்தைகளை கொன்று தம்பதி விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே உள்ள மீன்கிணறு, சின்ன மூப்பன் வீதியைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 35). இவரது மனைவி பாலாமணி (வயது 29). இவர்களுக்கு வந்தனா (வயது 12) என்ற மகளும், மோனிஷ் (வயது 10) என்ற மகனும் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் வெள்ளாங்கோவிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர். இதற்கிடையில், கணவன், மனைவி இருவரும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சல்பாஸ் விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். பின்னர், கணவன், மனைவி இருவரும் விஷத்தை குடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வந்தனா, மோனிஷ் இருவரும் குடித்த போது கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர். அதற்குள், கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். நான்கு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே, தனசேகரனும் பாலமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் வந்தனாகவும், மோனிஷிம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் வந்தனா, மோனிஷ் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி: நேரடியாக மோதும் திமுக - நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி: நேரடியாக மோதும் திமுக - நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணித்து உள்ளன.
அதேசமயம், இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கீ.சீதாலட்சுமி கடைசி நாளான நாளை (ஜன.17ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

எனவே, வரும் இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. கடந்த இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டிகளை பார்த்த வாக்காளர்கள் இந்த முறை இருமுனைப் போட்டியை சந்திக்க உள்ளனர்.

இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்குமா இருக்குமா? அல்லது மந்தமான நிலையில் இருக்குமா? என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

புதன், 15 ஜனவரி, 2025

வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி வீடு, வீடாக மக்களை சந்திப்பதை கடமையாக கருதுகிற கட்சி திமுக: அமைச்சர் முத்துசாமி பேட்டி

வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி வீடு, வீடாக மக்களை சந்திப்பதை கடமையாக கருதுகிற கட்சி திமுக: அமைச்சர் முத்துசாமி பேட்டி

வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி வீடு வீடாக மக்களை சந்திப்பது என்பது கடமையாக கருதுகிற கட்சி திமுக என தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பில் பயணிக்கும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,

தொடந்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்தார்.
அப்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வி.சி சந்திரகுமார் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார், சில பேர் வேட்பாளராக வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டிருந்தார்கள்.

 கேட்டவர்கள் அத்தனை பேரும் மிக தகுதியானவர்கள். அதனால் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நாள் அவகசம் தேவைப்பட்டது. அதற்குப் பின்னால் அனைவரின் ஒப்புதலோடு வி.சி சந்திரகுமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழமைக் கட்சியினரும் தோழமை உணர்வோடு இந்த தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 76 அமைப்புகள், 24 அரசியல் கட்சிகள் எங்களுக்கு துணையாக இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்,33 வார்டுகள் இந்த பகுதியிலே இருக்கிறது. தற்போது நான்கு வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் தான் வாக்குகளை சேகரித்துள்ளோம், மிகப் பெரிய அளவில் தாய்மார்கள் வரவேற்பு கொடுத்து, அத்தனை வாக்காளர்களும் திமுக வேட்பாளருக்கு முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர், 

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், கடந்த மூன்ரை ஆண்டுகளில் செய்த பணிகள்தான் மக்களிடத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த போதும், பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது, எனவே மக்களின் வரவேற்பும் ஆதரவும் பெருகி உள்ளது, ஆகவே இந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதுடன், மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வோம் எனவும் தெரிவித்தார்,

மேலும், வருகின்ற 17ஆம் தேதி 12 மணிக்கு பெருந்துறை சாலையில் உள்ள பணிமனையிலிருந்து புறப்பட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளோம் என பேட்டி அளித்தார்.