ஈரோடு :
*ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...*
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகிம்கான் (45). இவர், ஈரோடு பார்க் சாலையில் முகிம் கிளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சதாம்கான் மகன் ஆதில்கான் (35) என்பவர் கணக்காளராகவும், சூப்பர்வைசராகவும் வேலை பார்த்து வந்தார். ஆதில்கான் நன்றாக வேலை பார்த்ததால், அவருக்கு கடையின் வங்கி கணக்கையும், சொந்த வங்கி கணக்கின் வரவு செலவுகளை மேற்பார்வையிடும் பணியை முகிம்கான் வழங்கியிருந்தார்.
மேலும், கடையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளையும் ஆதில்கான் மேற்பார்வையிட்டு வந்தார்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு மன் ஆதில்கான் வேலைக்கு வராமல் தலைமறைவானார்.
இந்நிலையில், முகிம்கான் கடந்த அக்டோபர் மாதம் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவரது காசோலையில் அவர் கையெழுத்து இல்லாமலேயே லட்ச கணக்கான ரூபாய் ஆதில்கான் வங்கி கணக்கிற்கு மோசடியாக பரிமாற்றம் செய்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து ஆதில்கானை தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார்.
இதன்பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையின் உரிமையாளரான முகிம்கான் வங்கி கணக்கின் செயலி மூலமும், காசோலையில் போலியாக கையெழுத்திட்டும் ரூ.1.10 கோடி வரை ஏமாற்றி, ஆதில்கான் அவரது சொந்த வங்கி கணக்கிற்கும், அவரது உறவினர்கள் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்து மோசடி செய்திருப்பது உறுதி செய்தனர்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், எஸ்ஐ ஜாஸ்மின், ஆதில்கான் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆதில்கான் உத்திரபிரதேசத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்று, தலைமறைவாக இருப்பது கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில்கானை கைது செய்து, முறைகேடாக வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்த பணம் குறித்தும், அதில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



0 coment rios: