வேலைக்கு செல்லும் பெண்கள் அவசரத்திலும் மற்றும் குடும்பத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் அவர்களது அழகு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் அதே சமயத்தில், தங்களது அழகு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். வேலைக்கு போகும் பெண்களுக்கு நேரம் குறைவாக தான் இருக்கும். இருப்பினும் இந்த குறைந்த நேரத்திலும், உங்கள் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள் என்னென்ன என்று இவற்றில் நாம் காண்போம். தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள். பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும். பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும். எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும். உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடியுங்கள். மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும். உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள். பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது. வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு. தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும். ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும். தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும். வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும். கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும். புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும். சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும். சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும். பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.