வனக் கிராமங்களை முற்றுகையிடும்
யானைகளை விரட்ட ராமு, சின்னதம்பி ஆகிய கும்கிகள் நிறுத்தம்..!
ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனச்சரகத்துக்குள்பட்ட ஆசனூர், ஓங்கல்வாடி, அரேப்பாளையம் கிராமப்பகுதிகளில் அண்மைக் காலமாக ஒற்றைக் காட்டுயானை புகுந்து சேட்டை செய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியையொட்டியுள்ள அரேப்பாளையம், ஓங்கல்வாடி கிராமங்களுக்குள் பகல் நேரத்திலேயே அந்த காட்டுயானை வலம் வருவதால் கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர்.
சில நேரங்களில் அந்த காட்டுயானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பது, ஊருக்குள் நிறுத்தியுள்ள வாகனங்களின் கண்ணாடியை உடைப்பது, அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது என தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.
இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யானையை துரத்துவதற்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை.
இதனால் ஓங்கல்வாடி, அரேப்பாளையம், ஆசனூர் கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டுயானையைத் அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தியடிப்பதற்காக பொள்ளாச்சி, டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து ராமு, சின்னதம்பி ஆகிய 2 கும்கி யானைகள் வனத்துறையால் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த கும்கி யானைகள் ஓங்கல்வாடி, அரேப்பாளையம், ஆசனூர் வனப்பகுதியையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்டு யானைகளின் வருகையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் (பொறுப்பு) ராஜ்குமார் நமது செய்தியாளரிடம் கூறுகையில் ...
அரேப்பாளையம், ஓங்கல்வாடி, ஆசனூர் பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த யானை பகல் நேரத்திலேயே வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறிப்பது, ஓங்கல்வாடி, அரேப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து உலா வருவது என தொல்லை தருவதாக மக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டது. இந்த காட்டு யானை யாருக்கும் பயப்படுவதில்லைை. அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தியடிப்பதற்காக வேட்டைத் தடுப்பு காவலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த யானை தொடர்ந்து 4 நாள்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்தி வருவதால் இந்த யானையை துரத்துவதற்காக பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவை இப்பகுதியில் இரவும், பகலும் நிறுத்தி வைக்கப்பட்டு காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்படும்.
அதேசமயம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகங்களுக்குள்பட்ட பகுதியில் கருப்பன் என்று பெயரிடப்பட்ட வேறொரு காட்டு யானை அண்மைக்காலமாக அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் திகினாரை, மரியாபுரம், அருள்வாடி, ஜீரகள்ளி, மல்லன்குழி போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த போது, 2 விவசாயிகளை மிதித்து கொன்றது. அந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
தற்போது அந்த யானை மீண்டும் ஜீரகள்ளி, தாளவாடி வனச்சரகங்களுக்கு உள்பட்ட கிராமப்பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்து அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனவே விரைவில் கருப்பன் யானையை பிடித்து, அதற்கு ரேடியோ -காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறையினரும், கால்நடைத் துறையினரும் கலந்தாலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் கருப்பன் யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டு, அதன் நடமாட்டத்தை கண்காணிப்படும் என்று தெரிவித்தார்.