திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது.
இன்று பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21 மாத ஆட்சியில் திமுக ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவில் நிலவிய குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உள்ளது. எப்படியாவது தென்னரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அதிமுகவும் திமுகவுக்கு இணையாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
பிரச்சாரம் மட்டுமன்றி, வாக்காளர்களை செமத்தியாக கவனிக்கிறார்கள் திமுகவும், அதிமுகவும். வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டுள்ளார்கள் முக்கால்வாசி வாக்காளர்கள். பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது.
தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ.500, பிரியாணி, ஆண்களுக்கு ரூ.500 மற்றும் மதுபாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் நன்றாகவே கவனிக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால், குக்கர், வெள்ளி கால் கொலுசு, வெள்ளி டம்ளர், பட்டுபுடவை மற்றும் பிற பொருட்கள் என கிடைக்கிறது.
பால் குக்கர், காய்கறி வெட்டும் கட்டர், பிளாஸ்டிக் பாக்ஸ் செட், சமையலுக்கான குக்கர், கடா போன்றவையும் பல்வேறு இடங்களில் கமுக்கமாக வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள் கரைவேட்டிக்காரர்கள். இதற்கெல்லாம் மேலே ஒரு படி போய் ஸ்மார்ட் வாட்ச் கொடுத்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள். 20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாளே உள்ள சூழலில் இன்னும் பல பரிசுகள் கிடைக்குமா ? என்ற ஏக்கத்தில் வாக்காளர்கள் தொகுதியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முறைகேடுகள் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா ? என்ற கேள்வியும் எழுகிறது. வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது என்று அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இணையும் பாருங்கள்... https://youtu.be/vrWw3UUftHU
0 coment rios: