நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மலர் தூவி வரவேற்றார். பின்னர், கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-
கலைஞர் கருணாநிதியின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு முத்தமிழறிஞர் கருணாநிதியின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும், எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், கலைஞர் அவர்களின் புகழ் பாடும் ”முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த அலங்கார ஊர்தியின் வாயிலாக, கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பரைசாற்றுகின்ற வகையில் அனைத்து மாவட்டங்களுக்கு பயணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில், "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தியானது பயணிக்கப்பட்டு, அதன்படி, நமது ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம், காமராஜர் நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு, ஈரோட்டின் முக்கிய பகுதிகளில் இவ்வூர்தியானது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில், "எழுத்தாளர் -கலைஞர்" குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, படைப்புக்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேனா மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: