ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது.
இந்த நிலையில், கர்கேகண்டியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பவானி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதுடன், கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சகாதேவன் (வயது 46), இருசக்கர வாகன ஓட்டுனர் தனபால் (வயது 55) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 coment rios: