ஈரோடு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடையே பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கூறுவது மிகப்பெரிய தவறு. பெரியாரின் கொள்கைகள் மக்களுக்கு பாதுகாப்பானது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சமநிலையை ஏற்படுத்திய மிகப்பெரிய தலைவர். அவரது சிலையை அகற்றுவோம் என்று பாஜகவினர் கூறுவதில் அர்த்தம் இல்லை.
முதலில் அவர்கள் ஆட்சிக்கு வருவார்களா என்று பார்ப்போம். அறநிலையத்துறை என்பது இந்து சமய கோவில்களை காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை. அந்தத் துறை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று கூறினால் அது சரியான கோரிக்கையாக இருக்கும். ஆனால் அந்தத் துறையையே கலைத்து விடுவோம் என்று கூறுவதை எப்படி ஏற்பது? பெரியார் சிலை மீது கை வைக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல நீதிமன்றமும் இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சரே திட்டவட்டமாக கூறிவிட்டார். அவருக்கு கட்சியிலும் தனிப்பட்ட முறையிலும் நிறைய நண்பர்கள் உண்டு. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி இருப்பது தவறான செயலாகும். அமைச்சர் வேலுவின் செயல்பாடுகள் கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
இது போன்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகளுக்கு கூட இதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்பதே என் கருத்து. பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீர் வெளியேற்றும் விவகாரத்தில் ஆட்சியர் தலைமையிலான குழு அமைத்து விசாரித்து வருகிறது. கழிவு நீரை வெளியேற்றும் 50 நிறுவனங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டத்தை அரசியல் ரீதியாக கொண்டு செல்ல வேண்டாம் என்பது எனது கோரிக்கை. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
பேட்டியின் போது, மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்ரமணியம், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் திருவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: