திங்கள், 4 டிசம்பர், 2023

ஈரோட்டில் டிசம்பர் 16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர்.ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு. மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. கூடுதல், விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0424-2275860 என்ற தொலைபேசி எண், 94990-55942 என்ற கைப்பேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.  

மேலும், இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/p5Fc7kfbf6HNbaiA என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: