ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் (தூக்கநாயக்கன்பாளையம்) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.28.27 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-
டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி மதிப்பீட்டில் சத்தி அத்தாணி பவானி சாலையில் இருவழித்தடமாக அகலப்படுத்துதல், வடிகால் கட்டுதல், தற்போதுள்ள குழாய் பாலத்திற்கு பதிலாக பாலம் அமைத்தல், 7 மீ சாலையை 10 மீ சாலையாக அகலப்படுத்துதல், தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், வரப்பள்ளம், கொண்டையம்பாளையம் ஆகிய இடங்களில் 2 பாலங்களும் அமையவுள்ளது. இப்பாலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பெருமுகை ஊராட்சி கள்ளிப்பட்டியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.28 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சோமசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் புனிதா, பத்ம ஸ்ரீ டாக்டர் பழனிசாமி, டி.என்.பாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி வட்டார இயக்குநர் மோகன்ராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், தி.மு.க. நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: