ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் இணைந்து நடத்தும் சர்வதேச மாஸ்டர் நார்ம் சதுரங்கப் போட்டி நாளை மறுநாள் 3ம் தேதி ஈரோட்டில் துவங்குகிறது.
ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் இணைந்து நடத்தும் சர்வதேச மாஸ்டர் நார்ம் சதுரங்கப் போட்டி வருகின்ற டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்திய அளவில் முதன் முதலாக கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
இப்போட்டியில் அமெரிக்கா, ரஷ்யா, பெலாரஸ், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஐந்து வீரர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஐந்து வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் பங்கு பெறுவதன் மூலம் சர்வதேச போட்டியில் பங்கு பெற இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடி இந்த நார்ம் பெற வேண்டும் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலம் இந்திய வீரர்களுக்கு இது மிகவும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
போட்டியை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் துவக்கி வைக்க உள்ளார். வாசவி கல்லூரியின் செயலர் சதாசிவம் முன்னிலை வகிக்கிறார். ஈரோடு வித்யா சங்கம் செயலர் சுதாகர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் துணை தலைவர் விஜயராகவன், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் ரவிச்சந்திரன், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் துணை சேர்மன் கார்த்திகேயன் செல்வக்குமார், ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் பொருளாளர் ஸ்ரீ ஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், 6 நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் முடிவில் வெற்றி பெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. வாசவி கல்லூரியின் முதல்வர் தாமரைக்கண்ணன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனரும், ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலருமான ரமேஷ் நன்றியுரை ஆற்ற உள்ளனர்.
0 coment rios: