சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டு, ஓடாநிலையில் உயர்நீத்த மாவீரன் சுபேதார் வேலப்பனின் குருபூஜை விழா அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதேபோல தீரன் சின்னமலையின் ஒற்றர் படை தளபதி மாவீரன் பொல்லான் பிறந்தநாள் விழா மொடக்குறிச்சியில் நடைபெற்றது.
இந்த விழாவில் காவல் துறையினரின் அனுமதியின்றி கலந்து கொள்வதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் நேற்று காலை கோவையில் இருந்து காரில் நல்லமங்காபாளையத்துக்கு சென்று வந்து இருந்தார். இதில், அர்ஜுன் சம்பத் பங்கேற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் போலீசார் அவரின் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரை கைது செய்து, சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அர்ஜுன் சம்பத் கைதைக் கண்டித்து, அறச்சலூர் ரவுண்டானாவில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அருண் ராஜ் தலைமையில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநிலச் செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு கண்டன கோசம் எழுப்பி காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அறச்சலூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் முன்பு ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தூர் ராஜா தலைமையில், இந்து மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
0 coment rios: