வியாழன், 28 டிசம்பர், 2023

மாவீரன் பொல்லான் பிறந்தநாள் விழா: மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் மரியாதை

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வடுகபட்டி அருகே உள்ள ஜெயராமபுரத்தில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரன் பொல்லானின் 255வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியான மாவீரன் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் என்று அனைவராலும் போற்றப்படுகிற மரியாதைக்குரிய பொல்லான் அவர்களுடைய 255வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக, ஜெயராமபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மாவீரன் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய தலைமுறையினர் அறிந்திடும் வகையில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக ரூ.1.82 கோடி நிதியினை ஒதுக்கி தந்துள்ளார். இப்பணிகள் நடைபெறுவதற்கான முழு திட்டம் தயார் செய்தவுடன் மேலும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் சின்னமலையின் படைத்தளபதியான மாவீரன் பொல்லானின் தியாகத்தை போற்றும் வகையில், ஜெயராமபுரத்திலேயே சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என அவரது வாரிசுதாரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகள் வைத்தனர்.

அதன் அடிப்படையில் தற்போது சுமார் 91 சென்டிற்கும் அதிகமான இடத்தில் சிலையுடன் கூடிய அமைக்கப்படும். மேலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆணையினை பெற்று சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அமைச்சர்கள் முத்துசாமி, கயல்விழி ஆகியோர் அறச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜகோபால், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மணிகண்டன், பேரூராட்சி தலைவர்கள் விஜயகுமார் (அறச்சலூர்), அம்பிகாவதி (வடுகபட்டி), தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள், பொல்லான் வாரிசுதாரர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பாலாஜி, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் (பொ) தாமோதிரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,  

விழாவின் இறுதியாக மாவீரன் பொல்லானுக்கு, தமிழக அரசின் சார்பில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசிற்கும், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கும், சமூக நிதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் நன்றி தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: