மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) அனுப்பி வைத்தார்.
பின்னர், இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறியதாவது:- மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், முதற்கட்டமாக 1,680 மில்கா பிரட் பாக்கெட்கள், 5,280 குடிநீர் பாட்டில்கள், 540 பிஸ்கட் பாக்கெட்கள், 3,000 ரக்ஸ் பாக்கெட்கள், 2,130 போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) லதா, ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னசாமி, ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் மற்றும் பெருந்துறை அமைதிப் பூங்கா அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: