பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் .ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல் சக்தி நகர் நியாயவிலைக்கடையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன், பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கம் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து, சென்னையில், பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி, துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், 887 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 325 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1,212 நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7,64,667 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 1,391 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7,66,058 தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்புடன் ரூ.1,000 ரொக்கமும் என ரூ.84.87 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மேலும், இன்று (10ம் தேதி) முதல் 14ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களது நியாயவிலைக்கடைகளில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட உரிய நேரத்தில் வருகை புரிந்து, கூட்ட நெரிசல் இன்றி பொங்கள் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொண்டு, தமிழர் திருநாளா தைப்பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல குழு தலைவர்கள் பழனிசாமி, சசிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பானுமதி, துணை பதிவாளர்கள் மாதேஷ் (பொது விநியோக திட்டம்), கணேசன் (பொ) (ஈரோடு சரகம்), கூட்டுறவு சார்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் பாலாஜி, ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: