புதன், 3 ஜனவரி, 2024

முத்துகவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு அபராதம் விதித்த ரயில்வே போலீசார்

திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரள மாநிலம் பாலக்காடுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பிரிவு அருகே ஈரோடு - கரூர் ரயில்வே பாதையில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது, இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை அவ்விடத்தில் திடீரென நிறுத்திவிட்டு காத்திருந்தார். ஆனால், எவ்வித சிக்னலும் இல்லாததால் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

இதனை அறிந்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஈரோடு ரயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையில், முத்துகவுண்டன்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில்வே துறைக்கும், தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கும் சொந்தமான இடத்தில் கொட்டி வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்த நிலையில், ஊராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று மதியம் ரயில்வே பாதை அருகே குப்பைகள் அள்ளும் பொழுது ரயில்பாதை சிக்னல் ஒயர் துண்டிக்கப்பட்டது ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும், துறை சார்ந்த மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே துறை ஊழியர் விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட சிக்னல் ஒயர் சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து, ரயில்வே காவல்துறையினர் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிக்னல் ஒயர் துண்டிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த முத்துகவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக ஈரோடு சென்றடைந்தது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: