ஈரோடு கருங்கல்பாளையத்துக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காவிரி ஆறு உள்ளது. அமாவாசை நாட்களில் திதி கொடுக்கவும், இறுதி சடங்குகள் நிறைவேற்றியவர்கள் காவிரியில் புனித நீராடவும் இங்கு வருவது உண்டு. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களின் திருவிழாக்களுக்கு புனித நீர் எடுக்கவும் பக்தர்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பலர் குப்பைகளை பாலத்தின் மேல் நின்று ஆற்றில் கொட்டி செல்கின்றனர். இவற்றால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனர்.
தொடக்கத்திலேயே ஆகாயத்தாமரையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இப்போது காவிரி ஆற்று தண்ணீரை மறைக்கும் அளவுக்கு ஆகாயத்தாமரை வளர்ந்து பரந்து விரிந்து கிடக்கிறது. திடீர் என்று பார்த்தால் மைதானம் போல் காட்சியளிக்கிறது. எனவே, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து கரையோரம் வசிக்கும் மக்கள் காவிரி ஆற்று நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில், ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பதே கரையோரம் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆகாயத்தாமரை அதிக நீர் இழப்பு செய்யக்கூடிய பாசி வகையாகும். இது வளர்ந்து வருவதால் ஆற்றில் மீன்வளம் குறையும். கழிவுகள் தேங்கி தண்ணீரை மாசுப்படுத்தும். எனவே காவிரி ஆற்றில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
0 coment rios: