கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டை முன்னிட்டு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கின்னஸ் சாதனை முயற்சிக்காக நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியில் 16 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். 16 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியே எண்கள் கொடுக்கப்பட்டு க்யூ ஆர் கோடின் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டு அரங்கினுள் ஆண்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் முழுமையாக பெண்கள் மட்டுமே இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடன நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது வள்ளி கும்மி நடனம் தோன்றிய விதம் குறித்தும், அதனுடைய பரிணாம வளர்ச்சி குறித்தும் விளக்கி கூறப்பட்டு முதற் கட்டமாக 16 ஆயிரம் பெண்களும் சுமார் 6 நிமிடங்கள் தொடர்ந்து ஒரே விதமான அசைவுகளுடன் கின்னஸ் சாதனைக்காக வள்ளி கும்மி நடனம் ஆடினர். இதையொட்டி வாணவேடிக்கை நடந்தது. கின்னஸ் சாதனையை தொடர்ந்து பல்வேறு கிராமத்து பாடல்களுக்கு ஏற்ப பெண்கள் நடனமாடினர்.
இதை பார்த்த அனைவரும் உற்சாகமடைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர். முன்னதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் குழுவினர் இந்த நடனத்தில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு நடனமாட அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை ஈரோடு மட்டுமன்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
0 coment rios: