உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கைவிட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சுவாமிநாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், .எல்பிஎப், ஐஎன்டியுசி, எம்எல்எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், எல்பிஎப் கோபால், ஏஐடியுசி சின்னுசாமி, எச்எம்எஸ் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, காளை மாட்டுச் சிலை அருகிலிருந்து ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற போராட்டக் குழுவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, சாலையில் அமர்ந்த போராட்டக் குழுவினரை கைது செய்தனர். பின்னர், வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர். இதில், 250க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
0 coment rios: