வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சென்னிமலையில் நடந்த கலைஞர் மக்கள் சேவை முகாமில் 646 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கணுவாய் - அம்மன் காட்டேஜ், பசுவபட்டி அருகில் கலைஞா் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் கலைஞர் மக்கள் சேவை முகாம்கள் நடத்தப்பட்டு, அம்முகாமிலேயே உடனடி நடவடிக்கையாக சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் முகாசிபிடாரியூர் மற்றும் முருங்கத்தொழுவு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு கடந்த 1ம் தேதி 611 பயனாளிகளுக்கு ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, எக்கட்டாம்பாளையம், குப்பிச்சிபாளையம் மற்றும் பசுவபட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாமில் சுமார் 1907 மனுக்கள் பெறப்பட்டு, 814 நபர்களுக்கு முகாமிலேயே சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்போது 390 நபர்களுக்கு சான்றுகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நபர்களுக்கும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் உரிய தீர்வினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இம்முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 640 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா, 18 நபர்களுக்கு ரூ.19 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா நகல், 57 நபர்களுக்கு தடையின்மைச் சான்று, 8 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 62. ஆயிரத்து 840 மதிப்பீட்டில் நத்தம் பட்டா, 16 நபர்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் உத்தரவு, 2 நத்தம் பட்டா மாறுதல், 3 நபர்களுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவு, 14 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ், 4 நபர்களுக்கு விதவை சான்று, 118 நபர்களுக்கு அமைப்பு சாரா நல வாரிய அட்டை, 26 நபர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள், 317 நபர்களுக்கு ரூ.15 கோடியை 85 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது.

மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் வேளாண் உபகரணங்கள், மருத்துவத்துறையின் சார்பில் 15 நபர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சென்னிமலை வட்டாரத்தைச் சேர்ந்த, 34 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், ரூ. 16 லட்சத்து 22 ஆயிரத்து 446 மதிப்பீட்டில் தாலிக்கு தங்க காசுகளும் என மொத்தம் 646 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்து 926 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இப்பகுதியில், நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாமில் நிறைவு பெற்ற மீதமுள்ள பகுதிக்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. மக்களின் வளர்ச்சிக்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்லமுறையில் பெற்றுக் கொண்டு, பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வம், பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: