சனி, 10 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திர விற்பனை நாளை தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை திட்டம் நாளை (பிப்.12) திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நாளை (பிப்.12) முதல் வருகிற 16ம் தேதி வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம்.

தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். முதிர்வுறும் தேதியில் அன்றைய தேதியின் தங்கத்தின் மதிப்பிற்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். அதே வேளையில், தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இத்திட்டத்தில் பெறப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கீட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும்.

இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு ஆகியவை மிகவும் அவசியம். தங்கப் பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த தங்கப்பத்திர திட்டத்தில் சேர்ந்து பயன்பெற லாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: