வெள்ளி, 1 மார்ச், 2024

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

 ஈரோடு மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 01) துவங்கி 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வினை 265 பள்ளிகளைச் சேர்ந்த 21,520 மாணவ, மாணவியர்களும், 1,238 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த 106 முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,113 துறை அலுவலர்கள் மற்றும் 175 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளுக்கென 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 106 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 27 வழித்தட அலுவலர்களும், 1320 அறைக் கண்காணிப்பாளர்களும், 4 தொடர்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


தேர்வுப்பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் போதுமான அளவில் ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் எவ்வித பதற்றமுமின்றி நல்ல முறையில் தேர்வு எழுத எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து, தேர்வு அறையில் இருந்த வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்து, மாணவர்கள் எவரேனும் காலதாமதமாக வந்துள்ளனரா என கேட்டறிந்தார். மேலும், சொல்வதை எழுதுபவர்கள் தேர்வு எழுதும் அறையினையும், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை மற்றும் கழிவறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திம்மராயன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: