நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாளாகும். 28ம் தேதியன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 30ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளாகும். வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் மாதம் 4ம் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான அறிவிப்பினை மனு தாக்கல் துவங்கும் நாளான 20ம் தேதி அன்று காலை 11 மணிக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள பிற முக்கிய அலுவலகங்களில் (ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / வட்டாட்சியர் அலுவலகம் , சார்பதிவாளர் அலுவலகம்,நீதிமன்றங்கள்) தேர்தல் அறிவிக்கையினை படிவம் 1-ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிவிப்பு பலகையில் பிரசுரம் செய்யப்படும்.
மேலும், suvitha.eci.gov.in என்ற இணையதளத்தில் வேட்புமனு தாக்கலுக்கான தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். வேட்பு மனு படிவம் 2B-ல் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (வருவாய் கோட்டாட்சியர், ஈரோடு) மட்டுமே அளிக்கப்பட வேண்டும். வேட்பு மனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவர்களோ தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளர்கள் வரும்போது 100 மீட்டர் தூரத்திற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: