இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பவானிசாகர் அணையின் மேல் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் தேர்தல் நாள் ஏப்ரல் 19, 2024ல் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், 1950, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த தூய்மை பணியாளர்களிடம், தாங்கள் நாள்தோறும் தூய்மை பணிக்கு செல்லும் வீடுகளில் உள்ளவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி), ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணீஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், சத்தியமங்கலம் வட்டாட்சியர் மாரிமுத்து உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: