தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ காண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக நாளை ஏப்ரல் 26ம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பண்ணாரி சோதனைச் சாவடி, காரப்பள்ளம் சோதனைச் சாவடி மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வரட்டுப்பள்ளம் சோதனைச் சாவடி, பர்கூர் சோதனைச்சாவடிகளில் மட்டும் நிலை கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட கர்கேகண்டி - தட்டக்கரை வன அலுவலகம் அருகில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை நடத்தினர். இதில், அவர் பர்கூர் அடுத்த தாமரைக்கரை பகுதியைச் சேர்ந்த புட்டதம்படி (வயது 45) என்பதும், அவர் உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2.25 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், இன்று மதியம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் பழனிவேல் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹன்னூர், பெத்தனப்பாளையம், கூடலூர் அஞ்சலைச் சேர்ந்த வீரபத்திரன் (வயது 42) என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அந்தியூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 2 பேரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: