வியாழன், 11 ஏப்ரல், 2024

ஈரோட்டில் ஆம்னி வேனில் கடத்திய 660 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய ஆம்னி வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஈரோடு சாக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈரோடு வஉசி பூங்கா அருகில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை தடுத்து சோதனையிட்டனர். அப்போது அதில் 22 மூட்டைகளில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பதும், பொதுமக்களிடையே ரேஷன் அரிசியை வாங்கி, மாணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி தறித்தொழில் வேலை செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த 660 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: