கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு கோவை திருப்பூர் பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இந்தியா கூட்டணியில் சார்பில் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரத்தின் இடையே அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
தேர்தல் பணியில் ஒவ்வொரு நாளும் ஊக்கத்தையும், நம்பிக்கையும் அளிக்கிறது. அதற்குக் காரணம் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை முதல்வர் செய்திருக்கிற பணிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை.
ஒரு கோடியே 16 லட்சம் பேர் உரிமைத் தொகை பெற்று வருகிறார். அதற்குப் பிறகு விடுபட்ட மனுக்களை ஆய்வு செய்து உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். அதுபோல பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம். வேறு எங்கும் இததிட்டம் இல்லை. பெண்களின் மிகப்பெரிய சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. காலை உணவு திட்டம் சிறப்பாக இருக்கிறது கனடாவில் பாராட்டுகின்றனர். உயர் வகுப்பிற்குச் செல்லும்போது ஆயிரம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இப்போது மாணவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் உயர்கல்வியில் கல்லூரியில் சேர்கிறவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை வெளியில் எடுத்து சுத்தப்படுததி மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மொடக்குறிச்சி பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படுகிறது. வ.ஊ.சி பூங்காவில் 15 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.6 கோடி மதிப்பில் நூலகம் அமைக்கப்படும். சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி அரசு கல்லூரியான பிறகு மிகப் பெரிய ஸ்டேடியம் அமைக்கப்படும். ஐஏஎஸ் அகாடமி வரும்.
இந்த ஒன்றிய அரசு நம்மை ஒதுக்கி வைத்திருக்கிறது. புறக்கணிக்கப்படுகிறோம். இந்தியா கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். அப்போது, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற முடியும். நம்முடைய மாவட்டத்திற்கு, தொகுதிக்கு பல திட்டங்களை செய்வதற்கு வாய்ப்பாக அமையும். அதில் ஒன்று சாஸ்திரி நகர். அந்த மக்களுக்காக பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தொடர்ந்து பல பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும். தேர்தல் அறிக்கையில் எதிரிகள் கணக்கிட்டு சொல்லும் 43 வாக்குறுதிகளை கண்டிப்பாக முதல்வர் நிறைவேற்றுவார். இப்போது கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார் எனத் தெரிவித்தார்.
0 coment rios: