ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகன் மௌனிஷ் (வயது 18), நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் கபீஷ் (வயது 17), லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சுரேஷ்குமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில், நேற்று மதியம் மௌனிஷ் மற்றும் கபீஷ் ஆகிய இருவரும் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுப்புதூர் கருங்கரடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் தென்னை மட்டை எடுப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்றில் குளிக்கச் சென்றாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் மொடக்குறிச்சி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரின் உடலை தேடினர். நான்கு மணி நேரத்துக்கு பின்னர் இருவரின் உடலை சடலமாக மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் அனுராதா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: