அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது,
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்னும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த தொகுதியில் திமுக அமைச்சரவையில் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகிய மூன்று அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் நினைத்திருந்தால் இந்த தொகுதிக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்க முடியும். இவர்களைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கு எல்லாமே செய்து விடுவோம் என்று சொல்லிவிட முடியாது.
இந்தத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றால் இந்தத் தொகுதிக்கான பிரச்சனைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் நேரடி பார்வைக்கு சென்று விடும். ஈரோடு மக்களின் பிரச்சினைகள் என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. இரு தினங்களுக்கு முன் ஈரோட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கீழ்பவானி பாசனத்தின் கீழ் 3 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதாக தவறான தகவலைக் கூறி இருக்கிறார். உண்மையில் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசனம் பெறுகிறது. யாரோ எழுதிய துண்டு சீட்டை வைத்து பேசக்கூடிய முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் பற்றிய அக்கறையும் சிந்தனையும் இல்லை.
இந்த தொகுதி மக்களின் இன்னொரு பெரிய பிரச்சனை புற்றுநோய். நான் ஏற்கனவே நடைபயண யாத்திரை வரும்பொழுது இங்கு ஒரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைத்து தருவதாக கூறியிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஆயுர்வேத சித்தா உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ முறையில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளிக்க முடியும் என்று சொல்லி இருந்தேன். இது போன்ற தரமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்போது மட்டும் தான் ஏற்படுத்தி தர முடியும்.
பத்தாண்டு காலம் நாம் சிறப்பாக ஆட்சி நடத்தி உள்ளோம். எனவே நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் தொகுதியின் வளர்ச்சிக்காக. அங்கு பெரிய கட்சி சிறிய கட்சிகளை நசுக்கும். இங்கு முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். நாம் சமமாக நடத்துகிறோம். எப்படி மரியாதை தருகிறோம் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். பத்தாண்டுகளில் இதுவரை பார்க்காத அரசை மக்கள் பார்த்திருக்கிறார்கள். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா இன்று 5வது இடத்திற்கு வந்துள்ளது.
36,000 குடும்பங்கள் மாவட்டத்தில் கான்கிரீட் வீடுகள் ரூ.2 லட்சத்து 63 ஆயிரம் மானியம் மூலம் பெற்றனர். தமிழகத்துக்கு மோடி அரசு 11 லட்சம் கோடி மானியம் அளித்துள்ளது. 95 ஆயிரத்து 282 விவசாயிகளுக்கு முப்பது ஆயிரம் மானியம் கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கி உள்ளோம். கோடிக்கணக்கான மகளிருக்கு 300 ரூபாய் கேஸ் மானியம் தந்துள்ளோம். ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் ஈரோட்டில் பயன்படுத்தி உள்ளனர். மத்திய அரசு நேரடியாக கொடுத்தது தான் 29 பைசா. ஆனால் மறைமுகமாக தமிழகத்துக்கு கோடி கணக்கில் வழங்கியுள்ளோம். நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம்.
தமிழகத்தில் கஞ்சா என்பது பஞ்சாயத்தில் கூட கிடைக்கிறது. இது எப்படி வந்தது என்று முதல்வர் பதிலளிக்கவில்லை. திமுக ஆட்சி முப்பத்தி மூணு மாதங்களில் விடியல் என்று கூறி மக்களை சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. விதவிதமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். பால் விலை சொத்து வரி தண்ணீர் வரி உயர்த்தி உள்ளார்கள். 2024ல் மோடிக்கு கை கொடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். பிரதமர் மோடி போன்ற தலைவரை இயற்கை உருவாக்கியது. விஜயகுமார் சின்னம் சைக்கிள் சின்னம் ஆமை வேகத்தில் செல்லும். ஆனால் ஆமை முயல் கதையில் யார் வெல்லப் போகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, காங்கேயம் முன்னாள் எம்எல்ஏவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான விடியல் சேகர், ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான சந்திரசேகர் பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: