நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இவருக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.
சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய நடிகை நமீதாவை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனையடுத்து நடிகை நமீதா திறந்த வேனில் நின்றபடியே பொதுமக்களிடம் தமிழில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
நரேந்திர மோடி பிரதமராக இருந்த இந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அனைவரின் கைகளிலும் இப்போது ஸ்மார்ட் போன் இருப்பதற்கு காரணமே பாஜக தலைமையிலான ஆட்சியே காரணம். சிறிய அளவில் வியாபாரம் செய்யும் கடைகளில் கூட கூகுள் பே மற்றும் பேடிஎம் மூலமாக பணம் செலுத்தும் வசதியை பிரதமர் நரேந்திர மோடி கடின உழைப்பின் மூலம் செயல்படுத்தியுள்ளார். எனவே இன்னும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்க பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
0 coment rios: