சனி, 27 ஏப்ரல், 2024

அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கோடைக்காலத்தில் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அந்தியூர் பகுதியில் உள்ள இரண்டு மாம்பழ குடோன்கள் மற்றும் நான்கு பழக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வராஜ், டி.செல்வராஜ், எண்ணமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர், ரசாயனக் கற்கள் வைத்து செயற்கையாக மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின், உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் கூறுகையில், கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் வயிற்றுப் போக்கு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கற்கள் வைத்து பழுக்க வைத்திருந்தால், பழங்களின் மேல் சாம்பல் போன்று படிந்திருக்கும். வாங்கிச் செல்லும் மாம்பழங்களை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, சுத்தம் செய்த பின் சாப்பிட்டால், பாதிப்புகள் ஒரளவுக்கு குறையும்.

ஆய்வின்போது, எந்தவித ரசாயன பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. ஆனாலும் கார்பைடு கற்கள், ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: