இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் (வி.வி.பெட்) இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளமான இஎம்எஸ் போர்டல் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யப்பட்டு கடந்த மார்ச் 20ம் தேதி சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 9ம் தேதி) ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,688 வாக்குச்சாவடி மையங்களுக்கு 4,056 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2028 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,198 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் 2ம் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ட்ராங் ரூம்மில் சீலிடப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10ம் தேதி) ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, மேற்கண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் முத்து பழனியப்பா வள்ளியம்மை திருமண மண்டபத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: