கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனப்பகுதிகளிலிருந்து தண்ணீர் தேடி வனவிலங்குகள் வெளியில் வருகின்றன.
இந்நிலையில், வனவிலங்குகள் காட்டில் இருந்து வெளியில் வருவதை தடுக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதுார் மற்றும் கொங்கர்பாளையம் காவல் சுற்று வனப்பகுதி வனத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, சில நாட்களாக வனவிலங்கு ஆர்வலர் உதவியுடன், வனத்துறையினர் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் விலங்குகள் ஊருக்குள் வரக்கூடிய பகுதிகளில், ஆய்வு செய்து, அங்குள்ள தொட்டியில், தண்ணீர் நிரப்பும் பணியை, வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், விலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது ஓரளவு தடுக்கப்படும். மழை பெய்து தண்ணீர் கிடைக்கும் வரை, தொட்டிகளில் தொடர்ந்து லாரி மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
0 coment rios: