கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு தடை விதிப்பால்
ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறப்பதில் சிக்கல்!
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உள்பட்ட ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டில் ரூ.709 கோடி செலவில் தொடங்கப்பட்டது. நன்செய், புன்செய் பாசனங்களுக்கு ஆகஸ்ட் முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலும் எட்டரை மாதங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் மீதமுள்ள மூன்றரை மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் நிறுத்தப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளில்
வாய்க்கால் கரைகள் பலவீனமாகவும், மதகுகள் உடைந்தும் காணப்படும் நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் விடுபட்டு போயிருந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட இந்த பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் வாய்க்கால் சீரமைப்பது தொடர்பாக ஏற்கனவே போடப்பட்ட அரசாணை எண்: 276 க்கு பதிலாக கடந்த 13ஆம் தேதி திருத்தப்பட்ட அரசாணை எண்: 60ஐ அரசு வெளியிட்டது.
இந்நிலையில் விவசாயிகள் சிலர் கடந்த 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணை எண்: 60ஐ செயல்படுத்த இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்த இடைக்கால தடை உத்தரவால் கீழ்பவானி மெயின் வாய்க்காலில் 18க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர் ..
இதுக்குறித்து கீழ் பவானி பாசன விவசாயிகள் கூறியதாவது:
கீழ்பவானி பாசன கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 44 பாசன சங்கங்களின் ஒப்புதல் பெற்று தான் பொதுப்பணித்துறையினர் பணிகளை தொடங்கினர். எந்தெந்த இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பது, மதகுகளை சீரமைப்பது என்பது குறித்து விவசாயிகள் அளித்த மனுவின் பேரிலேயே செய்ய வேண்டிய பணிகள் முடிவு செய்யப்பட்டது. தற்போது நடந்து வரும் இந்த பணிகளை நிறுத்தி வைக்க பெறப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவால் 18-க்கும் மேற்பட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நன்செய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பது தள்ளிப்போகும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்கவில்லை என்றால் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்படும். பிரச்சனை குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வாய்க்காலில் கரைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல குறுக்கு கட்டுமான பணிகளும், மதகுகள் சீரமைப்பும் முக்கியம். இந்தப் பணிகளையும் மேற்கொள்ளவே அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி தடையணையை விலக்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.
0 coment rios: