ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் முக்கிய நீராதாரங்களாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்று (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,894 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.29) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 62.44 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64 அடியாக உயர்ந்தது. அதாவது, கடந்த 4 நாட்களில் 5.37 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
0 coment rios: