ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குருநாதபுரம் காலனியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் இன்று காலை குருநாதசுவாமி கோவில் வனம் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் ஆகியோர் மக்களிடம் சமரசம் செய்து, விரைந்து குடிநீர் வழங்கப்படும் என உறுதி கூறினர்.
இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 coment rios: