ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயியான இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 75). இவர்களுடைய மகன் குப்புசாமி என்கிற பழனிச்சாமி (வயது 46). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாய் பாப்பாத்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே, அவர்களுக்கு சொந்தமான காட்டை தாய் விற்றுள்ளார். இதில் தனக்கான பங்கு தொகையை குப்புசாமி ஏற்கனவே பெற்று செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை குப்புசாமி தனது தாய் பாப்பாத்தியிடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கி தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் குப்புசாமி ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்து விட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்த குப்புசாமி அங்கிருந்து தலைமறைவானார்.
பின்னர், சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குப்புசாமியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்னிமலை சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: