ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் ராஜா வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. காய்கறி வியாபாரி. இவர், ஈரோடு காரைவாய்க்காலில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில், 2022 ம் ஆண்டு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அதற்கான, தொகை ரூ.1.01 லட்சத்தை முழுவதுமாக செலுத்தி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர் வாங்கிய இருசக்கர வாகனம் பத்து மாதம் கழிந்த நிலையில் அடிக்கடி பழுதானது. வண்டி விற்பனை செய்தபோது ஓராண்டு காலம் எந்த பழுதானாலும் சரி செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் தந்துள்ளனர். ஆனால், பழுதுகளை சரி செய்ய இரண்டு ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர்.
இதனால், அவா் ஈரோடு மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நுகர்வோர் ஆணைய தலைவர் பூரணி, உறுப்பினர்கள் வேலுசாமி, வரதராஜ பெருமாள் ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தின் முழு தொகையான ரூ.1.01 லட்சம், குறைபாட்டால் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.1.36 லட்சத்தை இரண்டு மாதத்திற்குள் பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என இருசக்கர வாகன விற்பனை மையத்திற்கு உத்தரவிட்டனர்.
0 coment rios: