புதன், 3 ஜூலை, 2024

ஈரோட்டில் டெலிகிராம் மூலம் ரூ.14.50 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகிய இருவரும், ஆன்லைனில் டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை, அதிக வருவாய் ஈட்டலாம் என வெளியான அறிவிப்பை நம்பி வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில், ஓரிருமுறை செல்போனில், டெலிகிராம் செயலியில் வந்த வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, வர்த்தகமும் சரிவர நடந்து வருவாய் கிடைத்துள்ளது. இதனால், அதிக அளவில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டலாம் எனும் நோக்கத்தில் ரூ.14.50 லட்சம் வரை டெலிகிராமில் வந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர்.

ஆனால், அதன்பின் வர்த்தக நடவடிக்கை ஏதும் இல்லை. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும், பகுதி நேர வேலை என கூறி நம்பர் வைத்து பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையில், உதவி ஆய்வாளர் பாரதிராஜா உள்ளிட்ட போலீசார் வங்கி கணக்கு உரிமையாளர் இருப்பிடமான பொள்ளாச்சி, கோவைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர், பொள்ளாச்சி ஓரக்கலியூர் மாரிமுத்து மகன் சக்தி வடிவேல் (வயது 26), கோவை காளிபாளையம் ராம்குமார் (வயது 54) ஆகிய இருவரையும் கைது செய்து ஈரோடு அழைத்து வந்தனர். 

பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள், ஒரு வங்கி பாஸ் புத்தகம், 13 செக் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பகுதி நேர வேலை ஆசை காட்டி, இவர்கள் நடத்தி வந்த நிறுவனத்தின் மூலம், இந்திய அளவில் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுபோல, ஆன்லைனில் பகுதி நேர வேலை என ஆசை காட்டி இந்த போலி நிறுவனங்கள் நாடு முழுவதும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மேலும் கூறுகையில், ஆன்லைன் வேலைவாய்ப்பு, கிரெடிட் கார்டு லோன், ஏடிஎம் ரினிவல் போன்றவற்றிக்காக வரும் லிங்க் மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை பொதுமக்கள் செல்போனில் பகிர வேண்டாம்.

ஒரு வேளை சைபர் கிரைம் ஆன்லைன் மோசடி மூலமாக பண இழப்பு ஏற்பட்டால் 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ஆகியவற்றில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: