ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்டது துய்யம்பூந்துறை கிராம ஊராட்சி. இது 9 வார்டுகளைக் கொண்டது. இதில் 8வது வார்டு உறுப்பினர் பி.கோபாலகிருஷ்ணன் ஆவார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி மக்களுடன் திரண்டு வந்து மனு கொடுத்தார்.
அதில், கடந்த சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அது முறையாக விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்திற்கு முறையாக தகவல் அளிக்கப்படவில்லை. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் நடத்தப்படும் கூட்டத்தில் 200 பேர் வரை பங்கேற்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. 100 நாள் வேலையாட்கள் 100 பேரிடம் முதல்நாளே கையெழுத்து பெற்றுள்ளனர்.
சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும். ஆனால் 20க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருந்தும் பட்டியலினத்தைச் சேர்ந்த எனது வார்டில் ஒருமுறை கூட நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளே தன்னை அமரக்கூட அனுமதிப்பதில்லை. வெளியிலேயே நிறுத்தி பேசி அனுப்பி விடுகின்றனர்.
பலமுறை மனு அளித்தும் 8வது வார்டிற்கான அடிப்படை கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரும், செயலரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக ஆதிக்க மனநிலையில் உள்ளனர். இவ்வாறு முறையாக நடத்தாத கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து மறு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 coment rios: