ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (6ம் தேதி) அவர் வழக்கமான அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இவ்வலுவலகத்திற்குள் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஸ் மேற்பார்வையில் ஆய்வாளர் ரேகா தலைமையில் ஆய்வுக்குழு ஆய்வாளர் சதீஷ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென நுழைந்தனர்.
பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற விடாமல் அமர வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பின் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரனின் வலது கரமாகவும், அவரின் தனிப்பட்ட உதவியாளராகவும் செந்தில் என்ற நபர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடம் கத்தை கத்தையாக லஞ்சமாக பெறப்பட்ட ரொக்க பணமும் அந்த பணத்துடன் எந்த வாகனத்திற்கு எவ்வளவு தொகை என்ற விபரம் அடங்கிய ஆவணங்களையும் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இதனையடுத்து பொறுப்பு அதிகாரியான மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்களிடம் இருந்து கைப்பற்றிய லஞ்சப் பணத்தை மொத்தமாக எண்ணிப் பார்க்கையில் அதில், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, லஞ்சப் பணமாக பிடிபட்ட தொகையினை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பணம் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: