ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்புக்குழு தலைவர் கே.இ.பிரகாஷ் எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.
ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அனைத்து திருநங்கைகளுக்கும் பட்டா வழங்கி அரசின் சார்பில் குடியிருப்புகள் கட்டிக்கொடுப்பதோடு அவர்களுக்கு குடியிருப்பு காலனி உருவாக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தும் வகையில், திருநங்கைகள் சுய உதவிக்குழு உருவாக்கி வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோட்டில் 2 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்த சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போல மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்ற பிறகும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த கட்டிடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், கூடுதல் ஆட்சியர் சதீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார், மாவட்ட வன அதிகாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 coment rios: