வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நேரடியாக பணத்தை வங்கி மூலம் அனுப்பாமல், சட்டவிரோதமாக நபர்கள் மூலம் பணத்தை பரிமாறிக் கொள்வது ஹவாலா எனப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் சிரிகி மாவட்டம் ரிபாரி வஸ்ராம்புராவைச் சேர்ந்த கங்காராம் என்பவருடைய மகன் கீமாராம் (வயது 25) என்பது தெரியவந்தது.
மேலும், அவரிடம் உள்ள ரூ.40 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், ரூ.40 லட்சத்தையும், கீமாராமையும் ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: