புதன், 16 அக்டோபர், 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, நம்பியூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நம்பியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, எலத்தூர் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கொண்டு பராமரிக்கப்படும் பதிவேடுகள் நோயாளிகள் விபரம், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, எலத்தூர் பேரூராட்சி கண்ணாங்காட்டுபாளையம் பகுதியில் செயல்படும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்து உள்ள முட்டை மற்றும் சத்துமாவினை ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, எலத்தூர் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பெரிய குளம் மேம்பாடு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலையப் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து அவர்கள் பெற்றோரிடம் ஆலோசனைகள் வணங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நம்பியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியம் ஆறாவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.99.40 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளியில் செயல்படும் சத்துணவு மையத்தினை பார்வையிட்டு, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த சத்துணவினை சுவைத்துப் பார்த்து, மாணவியர்களின் தேர்ச்சி மற்றும் இடைநிற்றல் மாணவியர்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், நம்பியூர் காவல் நிலையம் மற்றும் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ், நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் ஜாகிர் உசேன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரஸ்வதி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: