வியாழன், 28 நவம்பர், 2024

கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்

கொடுமுடி பேரூராட்சியில் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை முன்னாள் அரசு செயலாளர்கள் கே.பி.கிருஷ்ணன், சிவதாஸ்மீனா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி, வடக்கு தெருவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (நவ.28) நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கே.பி.கிருஷ்ணன் (ஓய்வு) மற்றும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் தலைவர் சிவதாஸ் மீனா (ஓய்வு) ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சி பகுதியில் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கு இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கிருஷ்ணன் (ஓய்வு) நிலத்தினை வழங்கியுள்ளார்.
மேலும், நூலகம் அமைத்திட நமக்கு நாமே திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீத பங்குத் தொகையாக ரூ.55 லட்சத்தினை ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., மற்றும் டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலகம் ரூ.1.10 கோடி மதிப்பில் தரைதளம், முதல்தளம் என 2060 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கொடுமுடி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மையத்துடன் கூடிய நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நூலகமானது கொடுமுடி பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இதில் அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம், கதைகள், அறிவியல், ஆளுமை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த நூலகமானது, இளைஞர்களுக்கும். பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்விற்கு தயாராவதற்கு ஏதுவாக அமையும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகளில் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
நூலகங்களாக மட்டுமல்லாமல், திறன் மேம்பாட்டு மையங்களாக அமைந்துள்ளது. எனவே, இளைஞர்கள், பொதுமக்கள். மாணவ, மாணவியர்கள் என அனைவரும் இதுபோன்ற நூலகங்களை பயன்படுத்தி தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு. எதிர்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, தொழிலதிபர்கள் போன்ற உயர்ந்த நிலைகளை எட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., நிறுவன செயலர் செந்தில்நாதன், டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., நிறுவன செயலர் டெல்னாஸ் ஹர்டா, ஈரோடு யுஆர்சி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவராஜன், கொடுமுடி எஸ்எஸ்வி கல்வி நிறுவனங்கள் தலைவர் அருள், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: