சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி அங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் மாநகரம், பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை அரசு நிதி உதவி பெறும் பள்ளியாகவும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுயநிதி மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி நல்ல ஒழுக்கத்தையும், நல்ல தேர்ச்சி விதிதத்தையும் கொடுத்து வருகிறது. அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கென சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பு இருந்தது.இதில் 3.5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருந்தது. நீர் ஆதாரத்திற்க்கான மூன்று கிணறுகளும் அந்த நிலத்தில் இருந்தது.பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனத்திற்கு பள்ளி நிர்வாகம் கல்வித் துறைக்கு தகவல் சொல்லாமல் விலைக்கு விற்று விட்டனர். தற்போது அந்த விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பு செய்யாமல் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளியை இடித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும், ரியல் எஸ்டேட் நிறுவனமும் முயன்று வருகின்றது.
இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தி மாணவர்களின் கல்வியை பாதிப்படைய செய்து கொண்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆகவே மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளி தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்குமாறும் அப்பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் தகவல் சொல்லாமல் விற்பனை செய்த பள்ளி நிர்வாகத்தின் மீதும்,சட்டத்திற்கு புறம்பாக விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும், சட்டத்துக்கு புறம்பாக பத்திர பதிவு செய்த சூரமங்கலம் மேற்கு பத்திர பதிவு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அப்பள்ளியை அரசே ஏற்று நடத்துமாறும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை கூறும் போது,
மாணவர்கள் நலன் கருதி அப் பள்ளி தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 26.12.2024 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரவுண்டானா அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்களும், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது அம்பேத்கார் மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் உடன் இருந்தனர்.
0 coment rios: