வியாழன், 6 பிப்ரவரி, 2025

பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் பலி: 20க்கும் மேற்பட்டோர் காயம்; நிவாரணம் அறிவிப்பு

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை, செங்காளிபாளையம் கிராமம் சாம்ராஜ்பாளையம் பிரிவில் இன்று (பிப்ரவரி 6ம் தேதி) காலை சுமார் 8.45 மணியளவில் திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த TN‌ 34 T 4050 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே திசையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியைக் கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். விருமாண்டம்பாளையம், தில்லை நகரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 19 மற்றும் குன்னத்தூர் கிராமம், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 19) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: