அந்தியூர் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: 80 வயது விவசாயி கைது
அந்தியூர் அருகே கரும்பு தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 17 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் அருகே அத்தாணி கிழக்கு பீட்டிற்கு உட்பட்ட காக்காச்சிகுட்டை கணக்கம்பாளையத்தார் தோட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில் யானை ஒன்று நேற்று காலை உயிரிழந்து கிடந்தது. அதைப்பார்த்த விவசாயிகள் உடனே அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), ஈரோடு வனப்பாதுகாவலர் ராஜ்குமார், அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கரும்பு தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 80) என்பதும், வனவிலங்குகளிடம் இருந்து கரும்பு பயிரை காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் கரும்பு பயிரிட்டு உள்ள நிலத்தை சுற்றி கம்பி கட்டி அதில் கிணற்று மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்து பாய்ச்சி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அத்தாணி கிழக்கு பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வந்த ஆண் யானை, கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது, மின் வேலியில் சிக்கிக் கொண்டது. அதில், இருந்து உடலில் மின்சாரம் பாய்ந்ததில் யானை சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து, விளை நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக விவசாயி சின்னச்சாமி மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இதனையடுத்து, வன கால்நடை மருத்துவர் சதாசிவம் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர், யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை முயன்றனர். அப்போது, அங்கிருந்த விவசாயிகள் யானையை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து கால்நடை மருத்துவர் சதாசிவம் கூறும்போது, உயிரிழந்தது சுமார் 17 வயதுடைய ஆண் யானை. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கரும்பு தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது.
அப்போது, மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது, என்றார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பிரம்மாண்ட குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: