புதன், 26 பிப்ரவரி, 2025

பெருந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.26) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப்பால் வங்கி, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆய்வகம், பணி மருத்துவர்கள் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச கருவி அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.


இதைத் தொடர்ந்து, இக்கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் தேர்வுநிலை பேரூராட்சி, வார்டு 2ல் சீலம்பட்டியில் 15வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மூங்கில்பாளையம் ஊராட்சி மூங்கில்பாளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கோவில்பாளையம் குக்கிராமம் காவேரி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதனையடுத்து, மூங்கில்பாளையம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் கோவில்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலும் சேர்வக்காரன்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சீனாபுரம் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 701 மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் மானியத்தில் திரு.செங்கோட்டையன் என்பவர் காளான் வளர்ப்பு கூடாரம் அமைத்து காளான் வளர்த்து வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் வேளாண் பொறியில் துறையின் சார்பில், வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் திரு.கந்தசாமி என்பவர் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் ரூ.62 ஆயிரத்து 418 மானியத்தில் களை எடுக்கும் இயந்திரம் பெற்று 4.27 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.

மேலும், காஞ்சிகோவில் கிராமத்தில் விதைப்பெருக்குத் திட்டத்தின் கீழ், திரு.அருணாச்சலம் என்பவர் 1.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை கருவிதைப்பண்ணை அமைக்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைக்கு உற்பத்தி மானியமாக ரூ.25 வீதம் ஒரு கிலோ விதைக்கு வழங்கப்படுவதாகவும், மேலும், கொள்முதல் செய்யப்படும் விதைக்கு ஒரு கிலோவிற்கு ரூ.110 வீதம் வழங்கப்படுவதாகவும் பயனாளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தார்.


இந்த ஆய்வுகளின் போது, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பி.ரவிக்குமார், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், திருமதி.தேவகி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன், செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: